இலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்

0
24


Published by T. Saranya on 2020-03-28 20:21:38

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் இதுவரை ( இன்று 23/03/2020 மலை 6.00 மணி) 110 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 பேர் பூரண  குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. 

இந்நிலையில் தற்போது, அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில்  இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 101 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் அந்தந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அந்த பிரிவு  குறிப்பிட்டது.

இன்று சனிக்கிழமை மட்டும் புதிதாக நான்கு கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய , கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தோரில் இன்று மட்டும் இருவர் குணமடைந்து வெளியேறினர்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்ற இருவரே இவ்வாறு குணமடைந்து வெளியேறினர்.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களில், அதிகமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. இதில் 25 பேர் வரையிலானோர் கொழும்பு மாவட்டத்துக்குள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் 21 வைத்தியசாலைகளில்   5 வெளிநாட்டவர்கள்  உட்பட 199 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் 96 பேரும்,  வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 22 பேரும், ஹோமாகம மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் தலா 12 பேரும் சந்தேகத்தில் சிகிச்சை பெறும் 199 பேரில் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் அடுத்து வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கைக்குள்  அதிகரிக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் நிலையில், ஊரடங்கு காலப்பகுதியில் அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே தனிமைபப்ட்டிருக்க அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலைமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இந்த பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கையினை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிரமங்களை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இதன் நோக்கில் இப்பொறிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில், மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0760 390 981 , 0760 390 437 , 0766 527 589 , 0760 390 732 , 0760 390 752 அகிய  தொலைபேசி இலக்கங்களுடாக பொது மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்குமாறு அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு  கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள  பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் 1358 வாகனங்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here